சனி, 7 மே, 2011

மதுரை சாதி கலவரம்!... பக் பக் பதட்டம்!........



துரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி. கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.



அகமுடையார்கள் வசிக்கும் மேலத்தெருவான காளியம்மன் கோவில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போக கூடாது என்பது இப்போது கூட எழுதப்படாத விதி. 

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கூட தேவர் சாதி மாணவர்களை ஐயா என்றுதான் உடன்பயிலும் தாழ்த்தப்பட்டவன் அழைக்க வேண்டுமாம். இது இந்து பாசிசம் கோலோச்சும் குஜராத்திலோ அல்லது வடக்கின் இந்தி பேசும் மாநிலங்களிலோ நடக்கவில்லை.

பெரியார் பிறந்த மண்ணில்தான் இந்தக் கொடுமை.
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலுமா இப்படி என முகவாயை தேய்ப்பவர்களும், 2020- இல் எப்படியாவது வல்லரசாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வாளாவிருப்பவர்களும் அவசியம் போய் வர வேண்டிய இந்தியாவின் பல கிராமங்களில் ஒன்றுதான் வில்லூர்.

இந்த கிராமத்தில் வசிக்கும் குரு என்பவரின் இளைய மகன் தங்கபாண்டியன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் பள்ளியில் கிடைத்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சி வரைக்கும் படித்து விட்டு, தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு 7 ஏக்கர் விவசாய நிலம் வாங்க முடிந்த காரணமே அக்குடும்பத்தினர் மீது தேவர் சாதியினர் கோபமடைய போதுமான காரணமாக இருக்கையில் தங்கபாண்டியனின் எதிர்கால வாத்தியார் வேலை என்பது அவர்களது கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தது.


தந்தை வாங்கித் தந்த மோட்டார் சைக்கிளில் ஊரை வலம் வர விரும்பினார் அந்த இளைஞர். அப்படி வலம் வருகையில் காளியம்மன் கோவில் தெருவிற்குள்ளும் அவரது மோட்டார் சைக்கிள் போகவே, ஆத்திரமடைந்த அகமுடையார் சாதியினர் சுமார் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். 

27 வயது நிரம்பிய தங்கப்பாண்டியனை தாக்கிய அகமுடையார் சாதியைச் சேர்ந்த ஐவரில் மூவர் 24 வயது இளைஞர்கள். மற்ற இருவரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். இன்று யாரும் சாதி பார்ப்பதில்லை என்பதை பேசுபவர்கள் இதனைக் கவனிக்கவேண்டும். பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.


இது குறித்து தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டனர். கடந்த சனியன்று இரவு நடந்த இச்சம்பவத்திற்கு மறுநாள் போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையில் அமைதி ஏற்படுத்த அமைதிக்குழு அமைக்கும் பணியை அரசுத் தரப்பு தொடங்கியது.


ஆனால் தங்களிடம் வந்து அபராதம் கட்டி, மன்னிப்புக் கேட்டு மோட்டார் சைக்கிளைத் திரும்ப பெறாமல் போலீசுக்குப் போனதால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் எஸ்.பி மீதும் தாக்குதலை நடத்தினர். காவல்துறை இணை ஆணையாளரின் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், லத்தி சார்ஜீலும் பலர் காயமடைந்தனர். 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே தங்கப்பாண்டியனின் அண்ணன் முருகன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு குடும்பம் முன்னேறுவதையே சகிக்க முடியாத அளவுக்கு சாதிவெறி கோலோச்சுகிறது.


தாழ்த்தப்பட்டவனுக்கு தேநீர்க்கடையில் தனிக்குவளையும், மேலத்தெருவில் செருப்புப் போடத் தடையும் உள்ள ஊருக்குள் தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை தங்கபாண்டியனின் ஆசிரியர், பொருளாதாரத் தகுதி காரணமாக அகமுடையார் சமூகப் பெண்கள் அவனைக் காதலித்திருந்தால் என்ன நடக்கும்? கொலைதான் நடக்கும்.


மதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் அங்கே நிலவும் ஆதிக்க சாதிவெறியை நன்கு உணர்ந்திருப்பார்கள். பத்தாண்டுகள் அங்கே வாழ்ந்தவன்  என்ற முறையில் நானே இதை பார்த்திருக்கிறேன். அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர், அந்த குருபூஜைக்கு சுயமரியாதை இயக்க அரசியல்வாதிகளை மாத்திரமின்றி, போலிக் கம்யூனிஸ்டுகளையும் வரவழைக்குமளவுக்கு செல்வாக்கான ஆதிக்க சாதியினர்.

பசும்பொன் கிராமத்திற்கு லாரி,  வேன்களில் நிரம்பி வழியும் தேவர் சாதி குடிமகன்கள் மதுரை மேலமாசி வீதி வழியே அம்பேத்கரையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அர்ச்சிக்கும் வார்த்தைகளை காதால் கேட்கவே கூசும்.


பருத்தி வீரன் கார்த்திக் போல அம்மா மார் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தில் குடித்துக் கூத்தடிப்பதும், அம்மா போனபிறகு வழியில்லாமல் பொறுக்கித் தின்ன ரவுடியாவதும் என இச்சாதியின் பெரும்பாலான ரவுடிகளால் மதுரை நிரம்பி வழிகிறது.
மச்சி, மாப்பிள்ளை என்று சக நண்பர்களைப் பதின்வயதில் கூப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு மதுரைப் பகுதியில் வழங்கிவரும் பங்காளி என்ற உறவுமுறை புரிவதற்கு சிரமமானதுதான். ஆதிக்க சாதிகள் தமக்குள் மாத்திரம் விளித்துக்கொள்ளப் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை அது என எனக்கு தெரியாது. அப்படித் தெரியாமல் விளித்து, அவர்களிடம் வாங்கியும் கட்டிக்கொண்டவன் நான். எல்லோரையும் உறவுமுறை வைத்துப் பேசினாலும் தாழ்த்தப்பட்டவர்களை மாத்திரம் அப்படி மறந்தும் கூப்பிட மாட்டார்கள்.


அப்போதுதான் பாரதி கண்ணம்மா திரைப்படம் வந்து போயிருந்தது. எனது அறையை கல்லூரி விடுதியில் பகிர்ந்து கொண்ட சக வகுப்பு மாணவனுக்கு நடிகை மீனாவைப் பிடிக்காது. ஏன் என கடைசி வரை அவன் சொல்லவே இல்லை. கல்லூரி இறுதி நாளில் அவனே சொன்னது இது. “பின்ன என்னடா ! எங்க தேவர் சாதில பொறந்துட்டு போயும் போயும் எஸ்சி தான் கெடச்சானா காதலிக்கிறதுக்கு.”



கஞ்சிக்கில்லை என்றாலும் இத்துப் போன சாதி கௌரவத்திற்காக இந்த தேவர் சாதி வெறியர்கள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் நிறைய உண்டு. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர். இவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்தி விரட்டும் போது மட்டும்தான் வில்லூர் போன்ற கிராமங்களில் இந்தக் கொடுமைகள் நடப்பது குறையும்.......

நன்றி : வினவு தளம்!..

1 கருத்து:

IP