ஞாயிறு, 1 மே, 2011

அருணாச்சல முதல்வர் மாயமா? மரணமா?.....

அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூவுடன் சென்ற ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. கிட்டத்தட்ட 30 மணி நேரம் தாண்டி விட்ட நிலையில் ஹெலிகாப்டரும் அதில் பயணித்த அருணாச்சல் பிரதேச முதல்வர் உள்பட 5 பேரின் கதியும் என்ன என்பது தெரியவில்லை.



டோர்ஜியும், மேலும் நான்கு பேரும் ஹெலிகாப்டர் ஒன்றில் நேற்று காலை தவாங் நகரிலிருந்து கிளம்பினர். தலைநகர் இடா நகரை இந்த ஹெலிகாப்டர் 11.30 மணியளவில் வந்தடைந்திருக்க வேண்டும்.

ஆனால், இடையிலேயே அந்த ஹெலிகாப்டருனான தொடர்பு அறுந்து போனது. இதனால் அது விபத்துக்குள்ளானதாக அஞ்சப்பட்டு அதை தேடும் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுதப்பட்டன.

இந் நிலையில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர் பூடானில் டபோர்ஜிஜோ பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் செயலாளர் முன்னதாக தெரிவித்தார். ஆனால் அது பின்னர் மறுக்கப்பட்டு விட்டது.

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் எங்கு போனது என்பது தெரியவில்லை. அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நூற்றுக்கணக்கானோர் தேடுகிறார்கள்

தவாங் மற்றும் டெங்கா ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 300 ராணுவத்தினர், இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு    ப் படையினர், போலீஸார் உள்பட நூற்றுக்கணக்கானோர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூட்டான் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் பூட்டான் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இஸ்ரோவும் செயற்கைக் கோள் மூலம் படங்களை எடுத்து அனுப்பி உதவி வருகிறது.

ஹெலிகாப்டரில் காண்டூ தவிர ஹெலிகாப்டர் கேப்டன் ஜே.எஸ்.ஜப்பார், கேப்டன் கே.எஸ்.மாலிக், பாதுகாப்பு அதிகாரி யேஷி சோட்டாக், தவாங்          எம் எல் ஏ   ஷேவாங் டோண்டுப்பின் சகோதரி யேஷி லாமு ஆகியோரும் உடன் இருந்தனர்.

தேடுதல் பணிகளைக் கண்காணித்து முடுக்கி விடுவதற்காக நாராயணசாமி உள்ளிட்ட 2 மத்திய அமைச்சர்கள் இடா நகர் விரைந்துள்ளனர்.

கவலையில் குடும்பத்தினர்

டோர்ஜீ குறித்த தகவல் ஏதும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகமடைந்துள்ளனர். அனைவரும் குவஹாத்தி விரைந்து அங்குள்ள விமான நிலையத்தில் காத்துள்ளனர்.

டோர்ஜீயின் மனைவி மற்றும் மகனைத் தொடர்பு கொண்ட  காங்கிரஸ்               தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்துள்ளார்.

தேடுதல் வேட்டையில் பாதிப்பு

தேடுதல் வேட்டை நடந்து வரும் பகுதியில் வானிலை மோசமாக இருப்பதால் தேடுதல் வேட்டையில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் மாலை நெருங்கி வருவதால் தேடுதல் படையினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.

ராணுவத்தில் பணியாற்றியவர் டோர்ஜீ

ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றியவர் காண்டூ. வங்கதேசப் போரின்போது முக்கியப் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சீனாவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, தலாய் லாமாவை தவாங் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார் காண்டூ என்பது நினைவிருக்கலாம்.

2வது முறையாக முதல்வர் பதவியை வகித்து வரும் காண்டூ, அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 6வது முதல்வர் ஆவார்.

முதல் முறையாக 2007ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். கெகாங் அபாங் ராஜினாமாவைத் தொடர்ந்து டோர்ஜி முதல்வரானார். பின்னர் 2009ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர்25ம் தேதி 2வது முறையாக முதல்வர் ஆனார்.

  
பழைய ஹெலிகாப்டரா?

டோர்ஜீ பயணம் செய்த ஹெலிகாப்டர் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. ஆனால் அதை பவன் ஹன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது. வி.ஐ.பிக்களின் பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியும்... ஹெலிகாப்ட்டர்  விபத்தில் தான் மரணமடைந்துள்ளார் என்பது குறிபிடதக்கது...
அருணாச்சல முதல்வரின் ஹெலிகாப்ட்டர் மாயமாகி இருப்பதால், அரசியல்வாதிகளும் மக்களும் பீதியடைந்துள்ளனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP