செவ்வாய், 5 ஏப்ரல், 2011

எதியுரப்பாவின் ஏமாற்று வேலை!


மீண்டும் சர்ச்சையில் எதியுரப்பா!


பெங்களூர்: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எல்லா மாநிலங்களும் பரிசுகளை அறிவித்தது போல கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் பரிசை அறிவித்தார். ஆனால் அது சட்டவிரோத அறிவிப்பாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு மாநில அரசுகளும் பலவிதமான பரிசுகளை அறிவித்துள்ளன. அதேபோல கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும், இந்திய வீரர்களுக்கு பெங்களூருக்கு அருகே பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்குச் சொந்தமான 4000 சதுர அடி நிலத்தை வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால் இதை அவரால் வழங்க முடியாது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாகும். காரணம், முதலில் இந்த அறிவிப்பையே அவரால் வழங்க முடியாது என்பதால். அதற்கான அதிகாரம் எதியூரப்பாவிடம் இல்லை என்பதால், இந்த நில ஒதுக்கீட்டை அவரால் செய்ய முடியாது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாகும்.

பெங்களூர் வளர்ச்சி ஆணையம் ஒரு சுயேச்சையான, தனி அதிகாரங்கள் கொண்ட அமைப்பு. இந்த அமைப்புக்குச் சொந்தமான நிலத்தையோ பிற இடங்களையோ தனி நபர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ ஒதுக்குமாறு கர்நாடக அரசு உத்தரவிட முடியாது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பாவுக்கு, பிடிஏ நிலம் ஒதுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் பிறப்பித்த உத்தரவில், மாநில அரசு அல்லது கர்நாடகமுதல்வர் ஆகியோருக்கு, பிடிஏ நிலத்தை யாருக்கும் ஒதுக்கி உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது எதியூரப்பா அறிவித்துள்ள அறிவிப்பும் சட்டவிரோத அறிவிப்பாக கருதப்படுகிறது. அவரால் பிடிஏ நிலத்தை ஒதுக்கித் தர முடியாது என்ற நிலையில் எப்படி அவர் வாக்குறுதி அளித்தார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

மேலும் பிடிஏ நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளைப் பார்த்தால் இந்திய அணிக்கு ஒரு துண்டு நிலம் கூட ஒதுக்க முடியாது.

ஏற்கனவே தனது குடும்பத்தினருக்கு பிடிஏ நிலங்களை சகட்டு மேனிக்கு வளைத்துப் போட்டு ஒதுக்கிக் கொடுத்ததால்தான் சர்ச்சையில் சிக்கினார் எதியூரப்பா. விதிமுறைகள் முழுக்க தெரிந்திருந்தும் கூட, இப்போது எல்லோரும் பரிசு தருகிறார்களே என்பதற்காக தன் பங்குக்கு பிடிஏ நிலத்தை ஒதுக்கித் தருவதாக அறிவித்து விட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் எதியூரப்பா.

எதியூரப்பாவின் அறிவிப்புக்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் நக்கலடிக்க ஆரம்பித்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டுக்கள், தவறுகளை மறைக்க இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எதியூரப்பா. ஆனால் இதன் மூலம் மாநில அரசின் பெயரை மீண்டும் கெடுத்து தேசியஅளவில் அவமானத்தைக் கொண்டு வந்து விட்டார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

பிடிஏ ஆணையர் பரத் லால் மீனாவும் கூட எதியூரப்பாவின் அறிவிப்பு குறித்து ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். நில ஒதுக்கீடு செய்யக் கோரி அரசு எங்களுக்கு உத்தரவிட முடியாது. எனவே முதல்வர் எந்த அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக அரசிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றார்.

எதியூரப்பாவை சர்ச்சைகள் விடாது போல!

நன்றி: தட்ஸ் தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP